8ஆம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, பள்ளி மாணவர்களை 8ஆம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி எனது மகன் பெயிலாக்கப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தில் பள்ளி மாணவர்களை 8ஆம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்துக்கு விரோதமாக எனது மகன் பெயிலாக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து எனது மகனை 7வது வகுப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் பிராபகர உதயம் பெயிலாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
6,7,8,9,11 ஆகிய வகுப்புகளில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலுக்கு அனுமதி பெற சில வழிகாட்டி விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இறுதித் தேர்வில் 1 அல்லது 2 அல்லது 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு ஜூன் 7ஆம் தேதி நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிராபகர உதயம், அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்ததால் அவர் பெயிலாக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பள்ளி மாணவர்களை 8ஆம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, ஏப்ரல் 5ஆம் தேதி மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குநரகம் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி, இந்தச் சுற்றறிக்கை சட்ட விரோதம் என்றும், செல்லாது என்றும் அறிவிக்கப்படுகிறது.
இந்தச் சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் பிரபாகர உதயம் பெயிலாக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை பெயிலாக்கியதும் சட்ட விரோதமானது. எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகம் தமிழ் பிராபகர உதயத்தை 7வது வகுப்பில் சேர்க்க வேண்டும்.
இருதரப்பு வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டபடி, மாணவர் விரும்பினால் பள்ளி நிர்வாகம் அவருக்கு மாற்றுச் சான்றிதழ் அளிக்கலாம். தன்னுடைய விருப்பப்படி, தனது மகனை, வேறு ஏதாவதொரு பள்ளியில் 7ஆம் வகுப்பில் மனுதாரர் சேர்க்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment