குழந்தையை கடத்தி ரூ.1 லட்சத்துக்கு விற்ற கும்பல்
தமிழகத்தில் குழந்தைகளை கடத்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பலிடம் இருந்து இதுவரை 8 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது 3 மாத குழந்தையை, ஒரு கும்பல் கடத்தி விட்டதாக ராமாத்தாள் என்பவர் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனலட்சுமி, சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவா, அவரது மனைவி கிரிஜா, கூட்டாளி ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மத போதகர்கள் சென்னை படப்பையைச் சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் (48), திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வம் (44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ராமாத்தாள் என்பவரின் குழந்தையும், 3 வயது ஆண் குழந்தை ஒன்றும் விற்கப்பட்டதை கண்டுபிடித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இவர்களில் கிரிஜா என்பவரை விசாரணை காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கிரிஜா கொடுத்த தகவலின் பேரில் லலிதா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், அகில இந்திய மனித உரிமைகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியாக லலிதா செயல்பட்டது தெரியவந்தது.
இவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் பாண்டிச்சேரி, கடலூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து மேலும் பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை நடத்திய விசாரணையில் 8 குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகள் அனைத்தும் கிருஷ்ணகிரி, காவேரிபட்டினத்தில் கடத்தப்பட்டு, பல்வேறு இடங்களில் விற்பனை செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் 2 குழந்தைகளும், பாண்டிச்சேரியில் 3 குழந்தைகளும், பண்ருட்டியில் 2 குழந்தைகளும், செஞ்சியில் ஒரு குழந்தையும் விற்கப்பட்டுள்ளது. இதில் 5 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் அடங்கும். ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கம், பெண் குழந்தைகளை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளியான கிரிஜா உள்ளிட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிஜா காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து கிருஷ்ணகிரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
குழந்தை கடத்தலில் மேலும் பெரிய கும்பல் இருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி தனலட்சுமியை விசாரணை காவலில் எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Friday, June 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment