Tuesday, April 20, 2010

இஷ்ரத் போலி என்கவுண்டர்: குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

டெல்லி: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜெஹன் உள்ளிட்ட நான்கு பேர் குஜராத் மாநில போலீஸாரால் எனகவுண்டர் என்ற பெயரில் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட் அறிக்கையை தடை செய்து, மாஜிஸ்திரேட் தமங் குறித்து கடுமயான கருத்துக்களைத் தெரிவித்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டு இஷ்ரத், ஜாவேத் குலாம் முகம்மது ஷேக் உள்ளிட்ட நான்கு பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று கூறி போலீஸார் வழக்கை திசை திருப்பி விட்டனர்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட அகமதாபாத் மாஜிஸ்திரேட் தமங், அனைவரும் போலீஸாரால் மிகவும் நெருக்கமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட யாருமே போலீஸாரை சுடவில்லை. அவர்கள் யாருமே தீவிரவாதிகள் இல்லை. மாறாக போலீஸாரால் கடத்திச் செல்லப்பட்டு என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த குஜராத் அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி அறிக்கைக்கு இடைக்காலத் தடை வாங்கியது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, தமங்கை கடுமையாக கண்டித்திருந்தார். மேலும் அவரது விசாரணை முறை குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து இஷ்ரத்தின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் தலைமையிலான பெஞ்ச், உயர்நீதின்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குள் போக விரும்பவில்லை என்று தெரிவித்தனர். அதேசமயம், இந்த அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் கமிட்டிக்கு தடை விதித்து விட்டனர்.ச

மேலும், போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இஷ்ரத்தின் தாயார் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரிக்க பெஞ்ச் ஒன்றை அமைக்கவும் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பெஞ்ச் விசாரணையை முடிக்கும் வரை மாஜிஸ்திரேட் அறிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாஜிஸ்திரேட் தமங்கின் விசாரணை முறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் மற்றும் அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டதைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஏன் இவ்வளவு கடுமையான கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பது எங்களுக்குப் புரியவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி நடத்திய விசாரணை மிகவும் மோசமானதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP