Monday, April 26, 2010

இன்று பஸ், ரயில்கள் ஓடும்

சென்னை : நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. எனினும், தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. இதனால் பஸ், ரயில்கள் வழக்கம் போல ஓடும். ‘வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள், பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. திருவிழா மற்றும் கிரிவலம் காரணமாக, மதுரை, திருவண்ணாமலைக்கு மட்டும் முழுஅடைப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளனர். பந்த்துக்கு ஆதரவாக கடைகள் அடைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்நிலையில் பந்த் தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஸ்ரீபதி நேற்று ஆலோசனை நடத்தினார். டிஜிபி லத்திகா, தீயணைப்புத் துறை இயக்குநர் நட்ராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் மின்வாரிய தலைவர், அரசு செயலர்கள், குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தலைமை செயலர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களின் அன்றாட வாழக்கை பாதிக்காதவாறு, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவை பராமரிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கோ, பொது சொத்துக்கோ சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லா தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். வேலை நிறுத்த நாளன்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல் துறைக்கும் ஏற்கனவே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொலைபேசி, தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் விநியோகம், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை ஆகியவை வழக்கம் போல இயங்க, தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்பட தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் தடையின்றி ஓடவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு மாவட்ட நிர்வாகம், போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில ஈடுபட்டிருப்பார்கள். உயர் நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களுக்கு தகுந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர், பணிக்கு செல்பவர்களை தடுப்போர், வேலை நிறுத்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், வன்முறை, நாசவேலைகளில் ஈடுபடும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் நிலையம், பஸ் நிலையம், பணிமனை, மருத்துவமனை போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அசம்பாவிதத்தில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க எல்லா காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளும் தகுந்த முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தலைமை செயலர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP