நாமக்கல் :நாமக்கல்லில், பெற்றோரை புறக்கணித்தவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். 10 வாரிசுகளிடம் இருந்து பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வயதான பெற்றோரை கவனிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், 'பெற்றோர் மற்றும் முதியோர்கள் வாழ்க்கை பொருளுதவி சட்டம் 2007' அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சூரியம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம்(77) என்பவர், மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் அளித்த புகாரின் பேரில், அவரது மகன் சாமிநாதனை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும், வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோரை அழைத்து வரும்படி கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து 80 பேரை வி.ஏ.ஓ.,க்கள் அழைத்து வந்தனர். அவர்களில் பலர், வாரிசுகள் நல்ல நிலையில் இருந்தும், தங்களை கவனிப்பதில்லை என்று தெரிவித்தனர்.

அதன் பேரில், கலெக்டர் சகாயம், வாரிசுகளிடம் விசாரணை நடத்தி, வருமானத்துக்கு ஏற்ப, பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார். உதவித்தொகை வழங்குவது மட்டுமின்றி, 15 நாட்களுக்கு ஒரு முறை தாய், தந்தையரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து, தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதை வி.ஏ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.விசாரணை முடிவில், 10 பெற்றோருக்கு வாரிசுகள் மூலம் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இளநகரை சேர்ந்த காளியம்மாள் என்பவருக்கு, அவரது மகன் சுப்ரமணி, 500 ரூபாயை கலெக்டர் சகாயம் முன்னிலையில் வழங்கினார்.
No comments:
Post a Comment