கடைகளுக்கு தமிழில் பெயர்: 2 மாதம் அவகாசம் அளிக்க கருணாநிதிக்கு கோரிக்கை
சென்னை: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை 2 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு வணிகர் பேரவை உதவியாக இருந்து செயல்பட்டு வருகிறது.
வணிகர்களும் மனமுவந்து ஆங்கிலத்தில் இருக்கும் பெயரை தமிழில் மாற்றி எழுதி வருகின்றனர். பெயரை மாற்றி எழுதுவதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகிறதென்பதாலும் நடைமுறையில் இருக்கும் சில சிரமங்களாலும் பெயர் மாற்றம் முழுமையடையவில்லை. ஆனால் மே 31ஆம் தேதிக்குள் தமிழில் எழுதிவிட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருப்பது வணிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் பலகைகளை தமிழில் எழுதுவதில் எல்லோருக்கும் ஆர்வம் இருந்தாலும் பொருளாதாரம் இடம் கொடுக்காததாலேயே இப்படி தாமதம் ஏற்படுகிறது. முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு மேலும் 2 மாதங்கள் இதற்கு அவகாசம் அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்னொரு முக்கிய கோரிக்கையையும் இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் எந்த நுகர் பொருளாக இருந்தாலும் அதன் உறையில் அதன் பெயர், தயாரித்த நாள், உபயோகிக்கத்தகுதியான நாள், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்று அனைத்து விவரங்களும் தமிழில் கண்ணுக்கு தெரிகின்ற அளவில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட வேண்டும் என்று தாங்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இது காலாவதியான பொருட்கள் விற்பனை என்னும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதையும் தங்கள் மேலான கவனத்துக்கு சமர்ப்பிக்கிறோம் என்று வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sunday, May 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment