கல்விக்கட்டண விவகாரம்: பள்ளிகளை மூடும் போராட்டம் வாபஸ்
தனியார் பள்ளிக்கட்டண நிர்ணயம் தொடர்பாக ஜுன் மாதம் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை மூடும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, பள்ளிக்கூட நிர்வாகிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் அதிகபட்ச கல்விக்கட்டணமாக 11 ஆயிரம் ரூபாய் என்று தமிழக அரசு நியமித்த நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தது.
இதை எதிர்த்து பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், `தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர்.
இதனையடுத்து, பள்ளிக்கட்டணத்தை உயர்த்தும் வரை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்றும், ஜுன் 2 ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்றும் பல்வேறு பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளின் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
தனியார் பள்ளிக்கட்டண நிர்ணயம் தொடர்பாக ஜுன் மாதம் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை மூடும் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு தலைவர் டி.கிறிஸ்துதாஸ் தெரிவித்ததாவது:
எங்கள் கூட்டமைப்பில் 27 சங்கங்கள் இடம்பெற்றுள்ளன.கல்விக்கட்டணம் தொடர்பாக பள்ளிக்கூடங்களை ஜுன் மாதம் 2 ஆம் தேதி மூடப்போவதாக பல்வேறு பள்ளிகள் அறிவித்து உள்ளன.
நம் கோரிக்கைகளை குறிப்பாக, தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விகிதத்தை உயர்த்தவேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் மேல்முறையீடு செய்வதுதான் வழி.
கட்டண நிர்ணயம் தொடர்பாக, பள்ளிக்கூடங்கள் மூடுவது, ஸ்டிரைக் செய்வது என்பது உள்ளிட்ட எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடவேண்டாம். ஜுன் 2 ஆம் தேதி அனைத்து சுயநிதி தனியார் பள்ளிக்கூடங்களும் இயங்கும்.
நாம் நடத்துவது தொழிற்சங்கமோ, தொழிற்கூடமோ அல்ல.வருங்கால சிற்பிகளை உருவாக்கும் கல்விக்கூடங்களை நடத்துகிறோம்.நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளோம். எனவே, குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது.
நம் கோரிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் கருணாநிதி நல்லதொரு சுமூகமான முடிவு எடுப்பார் என்று நம்புவோம்.''
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கிறிஸ்துதாஸ் தெரிவித்தார்.
Sunday, May 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment