
புதுடெல்லி : சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் & போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து போலீசார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் வக்கீல் சங்க தலைவர்கள் ஆஜராகி, போலீசார் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதாடினர். வழக்கை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி ஆகியோர் விசாரித்து, போலீஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்பிரமணியம், பிரேமானந்த சின்கா ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தவிர இந்த 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தீர்ப்பு கூறினர். இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் 4 பேரும் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் 4 போலீஸ் அதிகாரிகளும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி ஆகியோர் மீண்டும் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. வேறு நீதிபதிகள் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் போலீஸ் அதிகாரிகள் மனு கொடுத்தனர். அதன்பிறகு, இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. போலீஸ் அதிகாரிகள் தரப்பில் வாதாட அவகாசம் கேட்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்று, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி போலீஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ராமசுப்பிரமணியம், பிரேமானந்தா சின்கா ஆகியோர்
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் விசாரித்தனர். போலீஸ் அதிகாரிகள் சார்பில் மூத்த வக்கீல் சோலி சொராப்ஜி ஆஜராகி, போலீஸ் அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவதிப்பு வழக்கு விசாரணையின்போது வக்கீல்கள் நீதிமன்றத்தில் குவிந்துவிடுகிறார்கள், இதனால் போலீசார் தரப்பில் சரியாக வாதாட முடியவில்லை. ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுகிறது, எனவே இந்த வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று வதாடினார்.
இதற்கு தமிழ்நாடு வக்ககீல்கள் சங்கம் சார்பில் வக்கீல் ஜெயந்த் ஆஜராகி, ‘போலீஸ் தரப்பில் கூறுவது முழுவதும் பொய். இதை ஏற்க கூடாது’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எதையும் எங்களிடம் மறைக்க முடியாது. இந்த வழக்கை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கக் கூடாது என்று போலீசார் மனு கொடுத்துள்ளனர். அதன்பிறகும் இந்த வழக்கை அவர்கள் விசாரித்துள்ளனர். அவர்கள் அவ்வாறு தொடர்ந்து விசாரித்தது தவறு. எனவே, போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதிக்கிறோம், இந்த வழக்கில் வக்கீல்கள் சங்கங்களும், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலும் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்’ என்று கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.
சட்டத்துறையின் முக்கிய பகுதியாக இருக்கும் காவல் மற்றும் வக்கீல்கள் இடையே நடந்த சன்டை நமது நாட்டில் உள்ள சட்டத்தின் ஒழுக்கத்தை குறிக்கிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிவர்கள், சன்டையின் காரணமாக பொது மக்கள் கூட காவல்துறை மற்றும் வக்கீல்களை அனுக அச்சப்படும் நிலை. என்று மாறும் இந்த அவல நிலை. பொறுத்திருந்து பார்போம்.
No comments:
Post a Comment