அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்றவர்கள் மீதான ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. விடுத்த கோரிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் நிராகரித்து விட்டது.
அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக லக்னோ, ரேபரேலி நீதிமன்றங்களில் சி.பி.ஐ. இரு விதமான வழக்குகளை தாக்கல் செய்தது.

பா.ஜ. தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கதியார், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சதிஷ் பிரதான், ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உட்பட 21 பேர் மீது லக்னோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த 21 பேரில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி கதியார் உட்பட 8 பேர் மீது ரேபரேலி தனி நீதிமன்றத்தில் இன்னொரு கிரிமினல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 8 பேரில் விஜயராஜே சிந்தியா, ராமச்சந்திர தாஸ், சதீஷ் நாகர் ஆகிய மூவர் இறந்து விட்டனர். இரு வழக்குகளிலும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
21 பேரில் எட்டு பேர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடந்து கொண்டிருப்பதால் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தவறு என்று கூறி அத்வானி உட்பட 8 பேர் மீதான வழக்கில் விசாரணை நடத்த லக்னோ நீதிமன்றம் மறுத்து விட்டது. 2001 மே 4ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை லக்னோ உயர் நீதிமன்ற பெஞ்சின் ஒற்றை நீதிபதி அலோக்குமார் சிங் விசாரித்து சி.பி.ஐ. கோரிக்கையை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தார். உள்ளூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான். அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment