நாகை அருகே இளம் பெண்ணின் உயிரைப் பறித்த கட்டப் பஞ்சாயத்து!
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே கட்டப் பஞ்சாயத்து என்ற பெயரில் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த செயலுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இச் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.அமிர்தம், மாநிலப் பொதுச் செயலாளர் உ. வாசுகி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கிருத்தக்காட்டாங்குடி கிராமத்திலிருந்து திருப்பூரில் வேலை செய்வதற்காக சென்று அங்கேயே தங்கியிருந்தவர்கள் சிகாமணி, சத்தியா, தேவிகா மற்றும் சிலர்.
இவர்கள் திருப்பூரில் தங்கியிருந்த போது சிகாமணி மற்றும் சத்தியா இருவருக்குமிடையே காதல் மலர்ந்து ஒருவரையொருவர் விருப்பப்பட்டு பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு உதவியவர்களுள் தேவிகாவும் ஒருவர்.
பொதுவாக இத்தகைய திருமணங்கள் பெற்றோரின் ஒப்புதலுடனோ, ஒப்புதலின்றியோ நடைபெறுவது அவர் தம் குடும்ப பின்னணி மற்றும் சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது.
யார் யாரை திருமணம் செய்து கொள்வது என்பது தனி நபர் விருப்பம் மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
இந் நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த சிகாமணி மற்றும் சத்தியா இருவரையும் சாதிப் பஞ்சாயத்தார் கிருத்தக்காட்டாங்குடிக்கு அழைத்து வந்து பெற்றோரின் ஒப்புதலின்றி திருமணம் செய்தது தண்டனைக்குரிய குற்றம் என கட்டப் பஞ்சாயத்தில் அறிவித்து இருவரையும் பொது இடத்தில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
மேலும் இவர்களது திருமணத்திற்கு உதவிய தேவிகாவையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து கொமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த இளம்பெண் தேவிகா தற்கொலை செய்து கொண்டார்.
ஜனநாயக நாட்டில் சாதி பஞ்சாயத்துக்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து தண்டிப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயலாகும்.
கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி குற்றம் என உச்ச நீதி மன்றமே அறிவித்துள்ளது. இருந்தும் இது போன்ற குற்றங்கள் தமிழகத்தில் நடந்துவருவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, தமிழக அரசு இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கிருத்தக்காட்டாங்குடி பஞ்சாயத்தாரின் நடவடிக்கையை கண்டித்தும், கட்டப் பஞ்சாயத்து முறைக்கு முடிவு கட்டக் கோரியும் மே 28ம் தேதி திருமருகல் பஜாரில் மாதர் சங்கம் சார்பில் கண்டன இயக்கம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Friday, May 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment