Friday, May 28, 2010

3ஜி சேவை: காவ‌ல்துறை எச்சரிக்கை

உங்கள் தொலைபேசியில் 3ஜி சேவையை ஏற்படுத்துகிறோம் என தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை அப்படியே நம்பிவிடாமல் இருக்குமாறு பொது மக்களை மாநகர காவ‌ல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்த காவ‌ல்துறை பல்வேறு புதிய புதிய உத்திகளை கண்டுபிடித்தாலும், குற்றங்களை இழைப்போரும் புதிய உத்திகளை கையாள தவறுவதில்லை.

இந்த நிலையில் தொலைபேசி சேவையில் தற்போது 3ஜி சேவை பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான தொலைபேசி சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை அளிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

எனினும், செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் எத்தகைய போன்களில் 3ஜி சேவை அளிக்க முடியும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். இதனை பயன்படுத்தி சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

முதலில் 3ஜி சேவை இல்லாத எண்களை கண்டுபிடித்து அவர்களது, வீட்டு தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களையும் சிலர் சேகரிக்கின்றனர். இதன் பின், அந்தக் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என தங்களை பொய்யாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

பின்னர் உங்களது தொலைபேசியில் 3 ஜி சேவை அப்லோடு செய்யப்பட உள்ளது, இதற்கான பணிகளை மேற்கொள்ள உதவியாக உங்கள் செல்போனை 2 மணி நேரத்துக்கு சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் படி சொல்கின்றனர். இதன்படி சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட சமயத்தில் அந்த நபரின் வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டு செல்போனுக்கு சொந்தக்காரரான நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கடத்தி வைத்திருக்கிறோம். குறிப்பிட்டத் தொகையை கொடுத்தால் அவரை விட்டுவிடுகிறோம் என்கின்றனர்.

இதில் பணம் கிடைக்க தாமதமானால், சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட செல்போனின் சொந்தக்காரரை அவரது மாற்று எண் மூலம் தொடர்பு கொண்டு மேலும் சில மணி நேரங்களுக்கு செல்போனை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றனர். இந்தக் கால அவகாசத்துக்குள் முடிந்தவரை முயற்சித்து பணத்தை பறித்து விடுகின்றனர். அவ்வாறு முடியாத பட்சத்தில் எவ்வித தகவலும் இன்றி இந்த நபர்கள் காணாமல் போகிறார்கள்.

சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கத் தொடங்கியுள்ளதாக காவ‌ல்துறை‌யினருக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக புகார்கள் எதுவும் இதுவரை தங்களுக்கு வரவில்லை என்று மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

எனவே, தங்களது தொலைபேசி எண்ணுக்கு 3ஜி சேவை குறித்து அழைப்புகள் வரும் போது பொதுமக்கள் அவற்றை அப்படியே நம்பிவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP