அரசு கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
"கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 5,450 பள்ளிகள் அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளன. இது குறித்து தணிக்கையாளர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வறிக்கை வரும் வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் அனைத்து தனியார் பள்ளிகளும் வசூலிக்க வேண்டும். மறுபரிசீலனைக்கு பிறகு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்'' என்றார் கோவிந்தராஜன்.
முன்னதாக சென்னையில் உள்ள மாநில பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தில் நீதிபதி கோவிந்தராஜனை, தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து, "ஏற்கனவே வசூலிக்கும் கட்டணத்தை அனுமதிக்குமாறு' கேட்டுக் கொண்டனர். மேலும் இது குறித்து கல்வி அதிகாரிகளிடமும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் 10 ஆயிரத்து 951 தனியார் பள்ளிகள் உள்ளன. இவை அதிக கட்டணம் வசூலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தை சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு தமிழக அரசு நிறைவேற்றியது.
பள்ளிக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஏற்கனவே தாங்கள் வசூலிக்கும் கட்டண விவரத்தை தனியார் பள்ளிகள் அந்தக் குழுவினரிடம் தெரிவித்தனர். பள்ளிக் கட்டணம் குறித்து குழுவினர் 15 முறைக்கு மேல் கூடி விவாதித்தனர்.
இதற்கிடையில் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றம் சென்றன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கல்வி வியாபாரமாவதைத் தடுக்கும் வகையில் உள்ள இந்த சட்டம், தனியார் பள்ளிகளின் தன்னாட்சியை அங்கீகரிக்கும் வகையிலும் உள்ளது என்று கூறி அந்த மனுக்களை நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. ஆனால் உச்ச நீதிமன்றமோ வழக்கை விசாரணைக்கு ஏற்காமலேயே நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி தொடக்கப்பள்ளிகள் ரூ. 3,500, நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5,000, உயர்நிலைப்பள்ளிகள் ரூ. 8,000, மேல்நிலைப் பள்ளிகள் ரூ. 11,000 வசூலிக்கலாம் என்று அரசு அறிவித்தது. இந்தக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவித்தது.
ஆனால் இந்தக் கட்டண நிர்ணயத்துக்கு அனைத்து தனியார் பள்ளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கட்டணத்தை உயர்த்தித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தால், அது மறுபரிசீலனை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.
Monday, May 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment