வாஷிங்டன்: ஈரானின் 12 நிறுவனங்கள், வங்கி மீதும், ஈரான் புரட்சி படையைச் சேர்ந்த 2 கமாண்டர்களுக்கும் அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது.
ஈரான் பொருளாதாரத்தை முடக்க யுஎஸ் தீவிரம்-புதிய தடைகள்
அமெரி்க்காவின் முயற்சியால் கடந்த 9ம் தேதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது.
இந்த தீர்மானத்துக்கு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, சீனா ஆகியன ஆதரவு தெரிவித்தன. நிரந்தர உறுப்பு நாடுகள் அல்லாத துருக்கியும், பிரேஸிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந் நிலையில் இந்தத் தடைகளை அடிப்படையாக வைத்து ஈரான் மீது அமெரிக்கா பல புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதன்படி, ஈரானி்ன் அணு ஆராய்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உதவிய அந் நாட்டு செபா வங்கியின் துணை நிதி நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதிக்குள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள 16வது ஈரான் வங்கி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் தபால் அலுவலகம் போல இயங்கி வந்ததாகவும், இதைக் கண்டுபிடித்து அதன் செயல்பாடுகளை முடக்கியதாகவும் அமெரிக்க நிதியமைச்சர் டிமோத்தி கெய்த்னர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வரும் வாரங்களில் ஈரான் மீதான பொருளாதார தடையை மேலும் அதிகப்படுத்துவோம். ஈரான் ஆதரிக்கும் பயங்கரவாத இயக்கங்கள் மீதான நெருக்குதலும் தொடரும். சர்வதேச தடையை மீற ஈரான் நிறுவனங்கள் மறைமுகமாக வேறு பெயர்களில் செயல்படுவதைக் கண்டுபிடித்து அவற்றின் மீது தடை விதிப்பது தொடரும் என்றார்.
மேலும் ஈரானின் அணு ஆராய்ச்சித் திட்டங்களை கையாண்டு வரும் அந் நாட்டு புரட்சிப் படையைச் சேர்ந்த முன்னணி கமாண்டர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேலும் 22 பெட்ரோலிய ஏஜென்ஸிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல ஈரானிலும், சில வெளி நாடுகளிலும் செயல்படுகின்றன.
மேலும் ஈரானின் 5 முக்கிய நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டுக்குச் சொந்தமான கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஐஆர்ஐஎஸ்எல் நிறுவனத்தின் 90 கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது.
இதுவரை மொத்தம் 26 நிறுவனங்கள் மற்றும் ஈரான் புரட்சிக் குழுவைச் சேர்ந்த சில தனி நபர்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா கோரி வருகிறது.
இதன்மூலம் ஈரானின் பெட்ரோலிய ஏற்றுமதியை முடக்கி, பொருளாதாரத்தையே முடக்கிப் போட அமெரிக்க அதிதீவிரம் காட்டி வருகிறது.
Saturday, June 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment