மோடிக்கு நெருக்கடி: போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் அமைச்சர் கைதாகிறார்
அகமதாபாத், வெள்ளி, 23 ஜூலை 2010
போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாற்றப்பட்டுள்ள குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன் பிணை கோரும் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் எந்த நேரமும் கைதாகலாம் என தெரிகிறது.
குஜராத் மாநிலம் அகமபாத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு தீவிரவாதி என்று கூறி சோராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுண்டர் மூலம் போலீசார் சுட்டுக் கொன்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அம்மாநில காவல்துறை துணை கமிஷனர் அபய் சுடாஷாமா என்ற ஐபிஎஸ் அதிகாரியை, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியன்று சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்ட குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு, இன்று மதியம் 1 மணிக்குள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ, ஒரே நாளில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது.
இதையடுத்து அவர் சிபிஐ- யிடம் இன்று நேரில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் மிடிஷ் அமின் சிபிஐ அலுவலகத்திற்கு வந்து, அமித் ஷா ஆஜராக மேலும் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சிபிஐ மறுத்துவிட்டது. இதனையடுத்து வழக்கறிஞர் மிடிஷ் அமின், அமீத் ஷாவுக்கு முன் பிணை வழங்க கோரி சிபிஐ தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அமீத் ஷாவுக்கு முன் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ, குற்றவாளிகளில் ஒருவராக அமித் ஷாவையும் சேர்த்துள்ளது.
இந்நிலையில் அமித் ஷாவின் முன் பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Sunday, July 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment