Wednesday, May 26, 2010

எஸ்எஸ்எல்சி: பெயிலான மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மறு தேர்வு

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன் பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி முடிவடைகிறது. மெட்ரிக்குலேசன் தேர்வுகள் ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி முடிவடையும்.

ஓ.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி முடியும். ஆங்கிலோ-இந்தியன் தேர்வு ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி முடிவடையும்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் 10ம் வகுப்பு தேர்வு (ஓஎஸ்எல்சி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடியாக மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் வகையில் ஜுன், ஜுலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் பெயிலானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் 31ம் தேதி வரை வழங்கப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் ஜுன் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும், மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளை பொறுத்தவரையில், ஒன்று முதல் 3 பாடங்கள் வரை ரூ.125ம், மெட்ரிக் தேர்வில் இரண்டு பாடங்களுக்கு ரூ.235ம், 3 பாடங்களுக்கு ரூ.335ம்,

ஆங்கிலோ-இந்தியன் தேர்வில் ஒரு பாடத்திற்கு ரூ.85ம், இரண்டு பாடங்களுக்கு ரூ.135ம், மூன்று பாடங்களுக்கு ரூ.185ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் பழைய பதிவு எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

தனித் தேர்வர்கள்..

தனித் தேர்வர்களைப் பொறுத்தவரையில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு அரசு வங்கியில் அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப் எடுத்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களும், தேர்வுக் கட்டணத்தை டிரசரி சலானாக (கருவூலக செலுத்து சீட்டு) கட்ட வேண்டும்.

மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணையத் தளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ ஜுன் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம்:

எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் 15ம தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் 31ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலங்கள், மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.

மறுகூட்டல் கட்டணமாக 2 தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.305ம், ஒரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ.205ம் செலுத்த வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு அரசு வங்கியில் அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்ட் எடுத்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களும், தேர்வுக்கட்டணத்தை டிரசரி சலானாக (கருவூலக செலுத்து சீட்டு) கட்ட வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 31ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP