Tuesday, May 18, 2010

சென்னையில் காலாவதியான உணவுப் பொருள் விற்ற சூப்பர் மார்க்கெட்கள்!

சென்னை: போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் விற்பனை குறித்த செய்திகள் இப்போதுதான் சற்றே ஓய்ந்தன. அதற்குள், போலி உணவுப் பொருள் விற்பனை குறித்த பகீர் செய்திகள் கிளம்பியுள்ளன.

சென்னையில் சூப்பர் மார்க்கெட் கடைகளில் காலாவதியான உணவுப் பொருள் விற்றதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ராயபுரத்தில் துரைப்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான குடோனில் சிவில் சப்ளை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது குடோன் முழுவதும் காலாவதியான, அழிக்கப்பட வேண்டிய உணவுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக குடோன் ஊழியர்கள் சுடலை ஈஸ்வரன், ஜெகன், சூப்பர் வைசர் முத்துபாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். துரைப்பாண்டியன் தலைமறைவாகிவிட்டார்.

இவரைக் கைது செய்ய தனிப்படை போலீசார் அவரது சொந்த ஊரான திருச்செந்தூருக்கு விரைந்துள்ளனர்.

காலாவதி உணவு பொருட்கள் மோசடி தொடர்பாக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசாரும், ராயபுரம் போலீசாரும் இணைந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சூப்பர் மார்க்கெட் தொழிலில் முன்னணியில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றின் குடோன் புழலில் உள்ளது.

இங்குதான் காலாவதியான உணவு பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கிருந்துதான் அந்த உணவு பொருட்கள் சப்ளை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மட்டுமின்றி சூப்பர் மார்க்கெட் தொழிலில் கொடி கட்டி பறக்கும் மேலும் 2 முன்னணி நிறுவனங்களும் காலாவதி உணவு பொருட்களை விற்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளன. இந்த 3 நிறுவனங்களும்தான் கெட்டுப் போன பொருட்களை ரகசிய ஏலத்தில் விற்பனை செய்து வந்துள்ளன.

இதற்கெனவே சென்னையில் 10 ஏஜெண்டுகள் இருக்கிறார்களாம். குறைந்த விலைக்கு வாங்கப்படும் இது போன்ற உணவுப் பொருட்களை இந்த ஏஜெண்டுகள் சிறிய பெட்டிக்கடைகளில் விற்று காசு பார்த்து வந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வடசென்னையில் வெட்ட வெளிச்சமாகவே நடைபெற்று வந்த இந்த மோசடி வியாபாரம் இப்போதுதான் அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.

காலாவதி உணவு பொருட்களை விற்பனை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் நேற்று மாலையில் ராயபுரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு ஒரு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் ராயபுரம் உதவி கமிஷனர் நவீன் சந்திரா, இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் துரைப்பாண்டியன் சிக்கினால் மோசடி தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய சூப்பர் ஸ்டோர்களும் இந்த மோசடியில் சிக்கியிருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP