போலி மருந்து வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பாரபட்சமின்றி நடவடிக்கை: லத்திகா சரண்
"போலி, காலாவதி மருந்து வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்'' என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில மருந்து கட்டுபாட்டுத்துறை இயக்குனர், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மருந்து கடைகளில் பிரிமோல்ட்-ன் என்ற மருந்தின் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அனுப்பிய புகாரின் பேரில், மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் 27.11.09 அன்று வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, சென்னை, வேலூர், கும்பகோணம் மற்றும் சில இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு தரமற்ற மருந்துகளையும் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதற்கிடையில் 16.3.10 அன்று பெரம்பூர் சரக மருந்து ஆய்வாளர் இளங்கோவன், காலாவதியான மற்றும் சேதமடைந்த மருந்துகளை கொடுங்கைïரை சேர்ந்த ரவி என்ற பிரபாகரன் சேகரித்து, உற்பத்தி குழு எண் மற்றும் காலாவதி தேதி போன்ற விவரவங்களை ரசாயன கலவை மூலம் அழித்து விட்டு, புதிய விவரங்களை பதிவு செய்து வினியோகித்து வந்ததை கண்டுபிடித்து, அவரது வீட்டிலிருந்த காலாவதியான மருந்துகளை கைப்பற்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன் பேரில் சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து முதலமைச்சர் 22.3.10 அன்று தலைமை செயலாளர், காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூட்டமொன்றை கூட்டி, இது குறித்து ஆய்வு செய்து, மாநிலத்தில் போலி மருந்து தயாரிப்பது மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பதை அடியோடு ஒழிக்க, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூட்டாய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர், மருத்துவத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டனர். போலி மற்றும் காலாவதியான மருந்துகளை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சோதனைகளின் போது மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புழுதிவாக்கத்தில் சிவகாமி மெடிக்கல்ஸ் என்ற கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான மருந்துகளையும், கடலூர் மாவட்டம் திருப்பாபுலியூரில் செல்வ வினாயகர் ஏஜென்சியில் பெனட்ரில் காப் பார்முலா என்ற பெயரில் போலி இருமல் மருந்து பாட்டில்கள் 2 ஆயிரத்து 700- ம், நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் ரமணா மருத்து கடையிலும், தெரசா மருந்து கடையிலும் காலாவதியான மருந்துகள் விற்கப்பட்டதை கண்டுபிடித்து கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
காலாவதியான மருந்துகள் மற்றும் போலி மருந்துகள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் முக்கியத்துவம் கருதியும், கூர்மையான புலன் விசாரணைக்கு ஏதுவாகவும், இவ்வழக்குகளில் அண்டை மாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும், அனைத்து வழக்குகளையும் மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாறி உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்குகளின் விசாரணையின் போது, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையினர், சென்னை சின்மயா நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர், தனது வசந்தா எண்டர்பிரைசஸ், மீனா ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் வசந்த் மீனா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனங்களின் மூலமாக காலாவதியான மருந்துகளை அதிக அளவில் விற்பனை செய்து வந்ததையும், இருதய நோய்க்கு பயன்படுத்தப்படக்கூடிய கார்டோஸ் என்ற மருந்தின் போலி மாத்திரைகளை, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விற்றதையும் கண்டுபிடித்து, அவர் மீது மேலும் ஒரு வழக்கை கடந்த 10ஆம் தேதி பதிவு செய்துள்ளனர்.
இதுவரையில் இவ்வழக்குகளில் மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களில் 14 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டு, அவைகளை முறைப்படி அழிக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையினர், இவ்வழக்குகளில் உண்மையில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்து, எந்தவித பாரபட்சமுமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இவ்வழக்குகளில் மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டும், போலியான மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு அனுப்பியவர்கள் குறித்து அறிந்து அவர்களை கைது செய்யவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
Sunday, May 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment