பள்ளிக் கல்வி கட்டணங்கள்-கோவிந்தராஜன் கமிட்டி மறுபரிசீலனை
சென்னை: பள்ளிக் கல்விக் கட்டணங்கள் குறித்து நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி மறுபரிசீலனை செய்யும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: செம்மொழி மாநாட்டில் நாடகங்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதே?
பதில்: மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருப்பதே ஐந்து நாட்கள்தான். அதில் முதல் நாள் காலையில் தொடக்க விழா, குடியரசுத் தலைவர் உரை, மாநாட்டு மலர் வெளியீடு, கலைஞர் செம்மொழி தமிழ் விருது வழங்குதல் போன்றவை இடம் பெறுகின்றன. மாலையில் மாநாட்டுப் பேரணி!.
மறுநாள் காலைல் ஆய்வரங்கத் தொடக்க விழா, தமிழ் இணைய மாநாடு, புத்தகக் கண்காட்சி, தமிழ் இணையக் கண்காட்சி, பொதுக் கண்காட்சி ஆகியவற்றின் தொடக்க விழாக்கள்!. அன்று மாலையில் திருமதி எழிலரசி ஜோதிமணியின் வீணைக் கச்சேரி, பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் "போர்வாளும் பூவிதழும்'' என்ற இலக்கிய நடன நாடக நிகழ்ச்சி, இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரைக் கொண்ட நாட்டிய கலா மந்திர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி!.
மூன்றாம் நாள் காலையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு பொது அரங்க நிகழ்ச்சி. அதில் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உரையாற்றுவார்கள்.
ஆய்வரங்க நிகழ்ச்சிகளும் அன்று தொடரும். அன்றைய தினம் மாலையில் டி.என். கிருஷ்ணன் அவர்களின் வயலின் நிகழ்ச்சி, திருமதி பிரசன்ன ராமசாமி குழுவினரின் "பிறப்பொக்கும்'' என்ற மாநாட்டின் மைய நோக்கப் பாடலை விளக்கும் நடன நாடகம்-புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி!
4ம் நாள் காலையில் ஆய்வரங்கம் மற்றும் தமிழ் இணையதள மாநாட்டு நிகழ்ச்சிகள்! மாலையில் ரேவதி கிருஷ்ணன் குழுவினரின் வீணை நிகழ்ச்சி, கிருஷ்ணகுமாரி நரேந்திரன் குழுவினரின் "முத்தமிழ் முழக்கம்'' நடன நாடகம், திரு பலசை குழுவினரின் இசை நிகழ்ச்சி!
மாநாட்டின் இறுதி நாளான 27ம் தேதி காலையில் ஆய்வரங்கம் மற்றும் தமிழ் இணைய மாநாட்டின் தொடர்ச்சி. பிற்பகலில் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி!. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் பட்டியல் இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே இவ்வளவிற்கு மேலும் மாநாட்டில் தனி நாடகங்கள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை.
கேள்வி: தமிழகத்தில் செயல்படும் சுயநிதி தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை மிகவும் குறைவாக உள்ளதாக சில தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளனவே?
பதில்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை சுயநிதி தனியார் பள்ளிகளிலும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த 5-8-2009 அன்று சட்டப் பேரவையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு- சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே. கோவிந்தராஜனை தலைவராகக் கொண்டு குழு ஒன்று தமிழக அரசினால் அமைக்கப்பட்டது. பள்ளிகளின் கட்டணம் நிர்ணயித்தல் தொடர்பாக இந்தக் குழு பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதி, பள்ளியின் நிர்வாக மற்றும் பராமரிப்புச் செலவினங்கள், மற்றும் பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்திலே கொண்டு பள்ளி நிர்வாகங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்- ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து- 10,934 பள்ளிகளுக்கும் ஆணை வழங்கியது.
இந்தக் கட்டணம் குறித்து எந்தப் பள்ளிகளுக்காவது குறைபாடு இருப்பின் அவர்கள் இந்த ஆணை பிறப்பித்த பதினைந்து நாட்களுக்குள் கோவிந்தராஜன் குழுவிடம் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 10,934 தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதில், சுமார் இரண்டாயிரம் பள்ளிகளிடமிருந்து முறையீட்டு விண்ணப்பங்கள் இந்தக் குழுவினால் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களை நீதியரசர் கோவிந்தராஜன் குழு மீண்டும் பரிசீலனை செய்து உரிய முடிவினை அறிவிக்கும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment