கல்லூரி தேர்வில் முகமது நபி பற்றிஅவதூறு கேள்வித்தாள் தயாரித்தபேராசிரியருக்கு சரமாரி வெட்டு
திருவனந்தபுரம், ஜூலை 5:
கேரளாவில் கல்லூரி தேர்வில் முகமது நபி பற்றி அவதூறாக கேள்வித்தாள் தயாரித்த மலையாள பேராசிரியரை நேற்று காலை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்பு பி.காம் தேர்வு நடந்தது. அப்போது, மலையாள கேள்வித்தாளில் முகமது நபி குறித்து அவதூறாக கேள்வி கேட்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.இதற்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதையடுத்து, கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் ஜோசப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ஜோசப் நேற்று காலை மூவாற்றுப்புழாவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக காரில் தனது மனைவி மற்றும் தாயுடன் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, வேனில் வந்த 8 பேர் கும்பல் ஜோசப்பின் காரை மறித்து பட்டாசுகளை வெடித்தனர். பின்னர் காரில் இருந்த ஜோசப் பை வெளியே இழுத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருடைய கை துண்டானது. இதை தடுக்க முய ன்ற ஜோசப்பின் மனைவி, தாயையும் கூட அந்த கும்பல் வெட்டிவிட்டு சென்றது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜோசப் பை மீட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மூவாற்றுப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோசப்பை வெட்டிய கும்பல் பயன்படுத்திய காரை போலீசார் கோதமங்கலம் பகுதியில் நேற்று பறிமுதல் செய்தனர். அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஜோசப் தாக்கப்பட்டதில் மதவாத கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். ஐ.ஜி. சந்தியா விசாரணை நடத்துவார். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த சம்பவத்துக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் பேபி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment