Wednesday, July 7, 2010

செயற்கைக் கோள்கள் மோதலால் விண்ணில் பெரும் குப்பை




ஹூஸ்டன்: கடந்த செவ்வாய்க்கிழமை பூமியிலிருந்து சுமார் 790 உயரத்தில் சைபீரியாவுக்கு நேர் மேலே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு செயற்கைக்கோள்கள் மோதி்க் கொண்டன.

இதில் அவை இரண்டும் சிதறியதில் நூற்றுக்கணக்கான துகள்கள் புவியை சுற்ற ஆரம்பித்துள்ளன. இந்தத் துகள்களால் விண்வெளியில் உள்ள பிற செயற்கைக் கோள்கள், சர்வதேச விண்வெளி மையம், ஹப்பிள் தொலைநோக்கி ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படலாம் என்ற பீதி விஞ்ஞானிகளிடையே பரவியுள்ளது.

மேலும் இனி செலுத்தப்படப் போகும் செயற்கைக் கோள்களுக்கும் இந்த துகள்களால் பிரச்சனை வரலாம் என்று கூறப்படுகிறது.

மோதிக் கொண்ட செயற்கைக் கோள்களில் ஒன்று அமெரிக்காவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இரிடியம்-33. இன்னொன்று ரஷ்யாவின் ராணுவ செயற்கைக் கோளான காஸ்மோஸ் 2251. 1993ம் ஆண்டு ஏவப்பட்ட இந்த 700 கிலோ செயற்கைக் கோள் இது செயலிழந்த நிலையில் விண்ணில் சுற்றிக் கொண்டிருந்தது.

விண்வெளி வரலாற்றிலேயே இரு செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலால் இரு மாபெரும் துகள் மேகங்கள் உருவாகியுள்ளன. அவை புவியை சுற்ற ஆரம்பித்துள்ளதால் ரிமோட் சென்சிங் உள்ளிட்ட வகையைச் சேர்ந்த செயற்கைக் கோள்களுக்குத் தான் முதல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரக செயற்கைக் கோள்கள் தான் புவியிலிருந்து 800 கி.மீ. உயரத்தில் பறப்பது வழக்கம்.

சர்வதேச விண் நிலையம் இப்போது 354 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருப்பதால் உடனடியாக ஆபத்தில்லை என்றாலும் அதில் சில துகள்கள் கீழே இறங்கினால் பிரச்சனை தான். ஆனால், இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கின்றனர் நாஸா விஞ்ஞானிகள். இப்போது இந்த நிலையத்தில் இரு அமெரிக்கர்கள், ஒரு ரஷ்ய வீரர் தங்கியுள்ளனர்.

அதே போல பல விண்வெளி ரகசியங்களை உடைத்துக் காட்டி வரும் உலகின் முதல் விண்வெளி தொலைநோக்கியான ஹப்பிள் பூமியிலிருந்து 600 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டுள்ளது. சிதறிய பாகங்களும் துகள்களும் கீழே இறங்க ஆரம்பித்தால் ஹப்பிளுக்கும் சிக்கல் வரலாம்.

இதையடுத்து இப்போது ஒவ்வொரு துகளையும் தனித்தனியே ட்ராக் செய்ய ஆரம்பித்துள்ளது நாஸா. அவற்றி்ன் அளவு, சுழற்றி, திசை ஆகியவற்றை கம்ப்யூட்டர்கள் உதவியோடு ட்ராக் செய்து அவை எப்போது, எங்கே சுழலும் என்ற மாபெரும் 'குப்பை ஆய்வில்' இறங்கியுள்ளது.

இப்போதைய நிலவரபப்படி விண்ணில் மணிதனால் உருவாக்கப்பட்ட வி்ண்கலங்கள், செயற்கைக்க கோள்கள், துகள்கள், ராக்கெட் பாகங்கள் என 18,000க்கும் மேற்பட்ட பொருள்கள் வலம் வந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்ககது.

பல நாடுகளும் ராக்கெட்கள், செயற்கைக் கோள்கள், விண் கலங்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டதால் விண்வெளியிலும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு பல காலமாகிவிட்டது. இதனால் தான் விண்வெளி ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி ஸ்லாட் (செயற்கைக் கோள் பாதை) தரப்பட்டு வருகிறது. இருந்தாலும் இது போன்ற விபத்துகள் இனிமேல் அதிகமாகவே நடக்கும் என்கிறது நாஸா.

கடந்த 2007ம் ஆண்டில் தனது செயலிழந்த ஒரு செயற்கைக் கோளை சீனா ராக்கெடை விட்டு மோதி அழித்ததில் மட்டும் 2,500 குப்பை துகள்கள் ஏற்பட்டு இன்னும் அவை பூமியை சுற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தனது செயலிழந்த காஸ்மோஸ் செயற்கைக் கோளை "junk orbit"எனப்படும் செயலிழந்த செயற்கைக் கோள்களுக்கான வட்டப் பாதையில் தான் சுற்ற விட்டிருந்தது. ஆனால், அதில் போய் அமெரிக்காவின் செயற்கைக் கோள் மோதியது, அமெரிக்கா தரப்பிலேயே தவறு இருப்பதைக் காட்டுவதாக ரஷ்யாவும் சீனாவும் கூறியுள்ளன.

ஆனால், தங்கள் பக்கம் தவறு இல்லை என்று அமெரிக்காவின் இரிடியம் செயற்கைக் கோள் நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனத்தின் மேலும் 66 செயற்கைக் கோள்கள் விண்ணில் சுற்றி வந்து கொண்டுள்ளன. இவை அனைத்தும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களாகும்.

இப்போது மோதிக் கொண்ட அமெரிக்க செயற்கைக் கோள் 1997ம் ஆண்டில் ஏவப்பட்டதாகும். இதன் எடை 560 கிலோ.

இந்த குப்பை துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்து எரிந்து சாம்பலாகும் வரை இனிமேல் ஏவப்படவுள்ள செயற்கைக் கோள்களை நேரம் பார்த்து, பாதையில் குப்பைத் துகள்கள் 'நடமாட்டம்' இல்லாத நேரத்தில் தான் ஏவ வேண்டி வரும். இந்தத் தொல்லை பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.&13;

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP