தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய வரும் 8ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை, தீயணைப்பு படை, சிறைத்துறைக்கு புதிதாக 10 ஆயிரத்து 112 ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் அன்றையதினம் காலை 9 மணிக்கே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்கு வரும்போது அழைப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை படித்து தெரிந்து வரவேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வு மையத்துக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் நீலம் அல்லது கறுப்பு பந்துமுனை பேனா மட்டுமே தேர்வு எழுத எடுத்து செல்லவேண்டும்.
சென்னையை பொறுத்தமட்டில் டி.எஸ்.கிருஷ்ணாநகர் சென்னை-37இல் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடைபெறும்.
அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in/tnusrb என்ற இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை தட்டச்சு செய்து பார்த்து உரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
தகுதியுள்ளவர்களாக இருந்தும் அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களுடைய பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம் ஆகிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தில் நகல் எடுத்த பக்கத்தில் தங்களின் புகைப்படத்தை ஒட்டி அதில் பதிவு பெற்ற அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு மையத்துக்கு எடுத்து சென்றால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment